புதிய வணிகத்தை ஆரம்பிக்கும் போது உங்கள் முன்னால் உள்ள சவால்கள்

spot_img

இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நிலையில், வணிகமொன்றை ஆரம்பிப்பதும், அதை கொண்டு நடத்துவதும் மிகப்பாரிய சவாலான விடயமாக மாறியிருக்கிறது.

எனினும், நெருக்கடியான சூழ்நிலைகளின் மத்தியிலும் ஒரு வணிகத்தை ஆரம்பித்து, அதன் அடிப்படைகளை எவ்வாறு வகுத்துக்கொள்ள வேண்டுமென்பதை அறியவேண்டியது அவசியமாகிறது.

புத்தாக்க சிந்தனைகள்/ எண்ணங்கள்

தொடக்கநிலை வணிகத்தை ஆரம்பிக்க விரும்பும் ஒவ்வொரு முயற்சியாளர்க்கும் தன்னுடைய புத்தாக்க எண்ணங்கள் மீது நம்பிக்கை இருக்கவேண்டும். ஆனால், அதுவே அதீத நம்பிக்கையாக மாற்றம்பெற்று, வணிகத்தை அழித்துவிடவும் கூடாது.

இலங்கையில் வணிக முயற்சியாளர்களுக்குள் இருக்கக்கூடிய மிகப்பெரிய பயமும் பலவீனமும் தமது எண்ணங்களை ஏனையவருடன் பகிர்ந்துகொள்ளுவதில்தான் உள்ளது. எங்கே, அடுத்தவர் தமது புத்தாக்கச் சிந்தனையை வியாபாரமாக மாற்றி, தம்மிடமிருந்து களவாடிக்கொண்டு போய்விடுவார்களோ எனும் பயமே, இதற்கு முதல் காரணமாகும்.

ஆனால், வணிகத்தின் மீது முதலீடு செய்ய விரும்பும் எவருமே, முயற்சியாளர்களின் எண்ணங்களைத் திருட விரும்புவதில்லை. மாறாக, அதில் முதலீடு செய்து உட்ச இலாபத்தைப் பெற்றுக்கொள்ளவே எதிர்பார்ப்பார்கள்.

எனவே, புத்தாக்கச் சிந்தனையாளர்கள், சிறந்த முதலீட்டாளர்களை இனங்கண்டு, தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், தமது எண்ணங்களை மீளவும் உறுதிசெய்து (Validate) கொள்ள முடியும்.

உற்பத்தி சேவையும் சந்தைத் தேவையும்

பெரும்பாலான தொடக்கநிலை வணிகங்கள் ஆரம்பிக்கும் போதே, தமக்கான வாடிக்கையாளர் வலையமைப்பை ஆரம்பம் முதலே கட்டியெழுப்ப வேண்டும் என எண்ணுகின்றது. அதற்காக அதிக நேரத்தையும் பணத்​தையும் செலவு செய்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் அது பயனுள்ளதாக உள்ளபோதிலும், சில சந்தர்ப்பங்களில் போட்டியாளர்கள் சந்தையில் சிறிய மாற்றத்துடன், உள்நுழைய அது இலகுவாகிவிடுகிறது.

எனவே, புத்தாக்க முயற்சியாளர்கள் தனியே வாடிக்கையாளர் வலையமைப்பை உருவாக்க நேரத்தையும், பணத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்காமல், ஏற்​கெனவே உருவாக்கப்பட்ட வலையமைப்பில் எவ்வாறு தங்களுடைய உற்பத்திகளையும் சேவைகளையும் சந்தைத் தேவைக்கு ஏற்றால்போல மாற்றியமைத்து கொடுக்க முடியும் என அறிந்துகொள்வது அவசியமாகும்.

வர்த்தக அடிப்படைகளை புரிந்துகொள்ளுதல் (Business Basics)

தொடக்கநிலை வணிகங்கள் எப்போதுமே புத்தாக்க சிந்தனையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால், அந்தச் சிந்தனைகள் முறையான வர்த்தக அடிப்படையில் இயங்கும்போது மாத்திரமே வெற்றிகரமாக மக்களைச் சென்றடைய முடியும்.

அடிப்படையில் எவ்வாறு வணிகத்தைத் தொழிற்படச் செய்வது, எப்படி பாதீட்டைக் கையாள்வது, எப்படி வாடிக்கையாளர்கள், வழங்குநர்களைக் கையாள்வது, சரியான முடிவுகளை எவ்வாறு மேற்கொள்வது என வணிகங்களுக்கு உரித்தான அடிப்படை விடயங்களில் மேற்கொள்ளும் தவறுகள் ஒட்டுமொத்த வணிகத்தையுமே சந்தையிலிருந்து ஓரங்கட்டி விடுகின்றது.

எனவே, தொடக்கநிலை வணிக முயற்சியாளர்கள் வணிகத்தை ஆரம்பிக்க முன்னரே, வணிகத்தை அடிப்படை தன்மைகளையும், சந்தை தொடர்பிலும் சரியாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

முதலீடு, நிதி திரட்டல்

இலங்கையின் தொடக்கநிலை வணிகங்கள் சந்திக்கும் சாதாரணமான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. எப்படி வணிகத்தைக் கொண்டு நடத்துவதற்கான பணத்தைப் பெற்றுகொள்ளுவது, எப்படி முதலீட்டு நிதியை திரட்டுவது, எப்படி மூலதனப் பங்​கை (Capital Share) முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பதே ஆகும்.

எனினும், ஒவ்வொரு முதலீட்டு நிதி திரட்டலின்போதும், மூலதனப் பங்கை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்கின்றபோது, ஒரு நிலையில் வணிகத்தை இழக்கவேண்டிய நிலை கூட ஏற்படலாம். இத்தகைய நிலையை கையாள இன்றைய வணிக முயற்சியாளர்கள் எவ்வாறு தயாராக இருக்கிறார்கள் என்பதே கேள்விகுறியாக உள்ளது.

முயற்சியாளர்கள் எப்போதுமே தமது வணிகத்தின் வெற்றிக்காக ஆத்மார்த்தமாக செயற்படுவார்கள். அதுவும், வளர்ச்சி நிலையில் அதிக முதலீடு தேவைப்படும்போது, அதை எவ்வாறாவது பெற்றுக்கொண்டு வணிகத்தின் தொடர்ச்சியாக இயங்க வைக்கவே விரும்புவார்கள்.

அந்த நிலையில் மூலதன பங்கை அதிகளவில் இழக்கவேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எனவே, வணிக முயற்சியாளர்கள் அதிக கவனத்துடன் செயற்படவேண்டியது அவசியமாகும்.

பொருத்தமான அணியை கட்டியெழுப்பல் (Build a Team)

தொடக்கநிலை வணிகங்களில் கடினமான பகுதிகளில் ஒன்று, சிந்தையில் உதித்த சரியான எண்ணங்களை (Ideas) எவ்வாறு நிஜத்தில் நிகழ்த்திக்காட்டுவது என்பதேயாகும். பெரும்பாலான தொடக்கநிலை வணிகமுயற்சிகள் ஆரம்பித்த இடத்திலேயே முடிந்துபோவதற்கு காரணம் முயற்சியாளர்களிடமும் சரி, முதலீட்டாளர்களிடமும் சரி போதிய பொறுமையின்மையே ஆகும்.

நடைமுறைபடுத்தும் வணிகத்திட்டங்களுக்கு, சந்தை பொருத்தமான சமிக்ஞையைக் காட்டாதபோது, அதற்கேற்ப செயலாற்றாமையானது அல்லது அதற்கேற்ப தங்கள் வணிகத் திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்ளாமை என்பனவும் வணிகத்தின் தோல்வி நிலைக்கு வழிவகுக்கிறது.

இந்த நிலையைத் தவிர்ப்பதற்கு, ஒரு முயற்சியாளனாக எத்தகைய திறமைகள் (skill) வணிக எண்ணத்தை (Business Idea) வெற்றிகரமான வணிகமாக (Startup/Business) மாற்றும் என அறிந்திருப்பது அவசியமாகும்.

குறித்த திறன்கள் முயற்சியாளரான என்னிடம் உள்ளதா, இல்லையெனில் என்னுடைய பங்குதாரர்களிடம் (Partners) உள்ளதா, அல்லது அதற்கேற்ற பொருத்தமான அணியை தேர்வு செய்ய வேண்டுமா என்பதைக் கண்டறிய வேண்டும்.

அவ்வாறு தனக்கான அணியை உருவாக்க விரும்பும் முயற்சியாளர்கள் பொருத்தமான திறன் உடையவர்களைக் கண்டறிவது அவசியமாகும். அதுபோல, தனது அணியை அல்லது ஊழியர்களை தக்கவைத்துக் கொள்வதும் அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்

Loading RSS Feed