வணிகங்களின் தோல்விக்கான காரணங்கள் இவைதான்!

spot_img

போட்டித்தன்மைமிக்க வணிகச்சூழலில் வெற்றிபெறுகின்ற வணிகங்கள், விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே இருக்கின்றன. பெரும்பாலான வணிக முயற்சியாளர்களும் வணிக உரிமையாளர்களும், தமது வணிகத்தின் தோல்விக்குப் பெரும்பாலும் தாங்கள்தான் காரணம் என்பதை உணருவதில்லை.

மாறாக, வணிகங்களின் தோல்விக்கு, பொருளாதாரச் சூழ்நிலை, வங்கிகளின் செயற்பால்பாடுகளென, முக்கியமற்ற காரணங்களை அடுக்கிக்கிக்கொண்டு, தங்களை சீர்த்தூக்கிப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். விளைவு, மற்றுமொரு வணிகத்தை ஆரம்பிக்கும்போதும், இந்தப் பரிதாபநிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

எனவே, வணிகமொன்றைக் கொண்டு நடத்திய அனுபவமுள்ளவர்களும் சரி, வணிகமொன்றைக் கொண்டுநடத்த விருப்பமுள்ளவர்களும் சரி, வணிகமொன்றின் தோல்விக்கானதும் வெற்றிக்கானதுான அடிப்படைக் காரணங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சந்தை ஆய்வை முழுமைப்படுத்தாமை

வணிகத்தை ஆரம்பிக்க விரும்புகின்ற எந்தவொரு வணிக முயற்சியாளருமே, தமது வணிகத் திட்டத்துக்கு வழங்கும் முன்னுரிமையின் பாதியளவைக்கூட, சந்தை ஆய்வுக்கு வழங்குவதில்லை. பெரும்பாலான வணிக முயற்சியாளர்கள், தாங்கள் மிகக் கஸ்டப்பட்டு உருவாக்கிய வணிக முயற்சியை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற ஆதீத நம்பிக்கையில், தமது வணிகத்தை மக்களிடத்தே அறிமுகம் செய்துத் தோற்றுப் போய்விடுகிறார்கள்.

உண்மையில், வணிக முயற்சியாளர்கள் வழங்குகின்ற அனைத்தையுமே, மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வாகவுள்ள வணிகங்களை மாத்திரமே ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.

இதனால்தான், மிகப்பெரும் பிரபலமான, வெற்றியடைந்த வணிக முயற்சியாளர்கள்கூட, “சந்தை ஆய்வின் மூலமாக மக்களின் பிரச்சினைகளைக் கண்டறியுங்கள், பின்னர் அதற்கான தீர்வைச் சிந்தியுங்கள், அதனை வணிகமாக்குவதைப் பிற்பாடாகப் பார்த்துக்கொள்ளலாம் எனச் சொல்கிறார்கள்.

தற்போதைய நிலையில், வணிகங்களை முன்னெடுக்கவும் அவற்றைக் கட்டியமைக்கவும், சந்தை ஆய்வுகளும் அதனைச் சார்ந்த தரவுகளும், மிக முக்கியமானதாக அமைகின்றன.

வணிகத்திலான ஈடுபாடு

ஒரு வணிகத்தை ஆரம்பிக்கும்போது இருக்கின்ற ஈடுபாடு, அதைக் கொண்டு நடத்துவதில் தொடர்ச்சியாக இருக்கிறதா என்பதே மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது. பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிகத்தை ஆரம்பிக்கும்போது வழங்குகின்ற ஈடுபாட்டை, வணிகத்தில் ஏதேனும் தொய்வுநிலை ஏற்படுகின்றபோது வழங்க முன்வருவதில்லை.

அதேபோல, இலங்கை போன்ற போட்டித்தன்மைமிக்க நாடொன்றின் வணிகச் சூழலில், மேற்கத்திய நாடுகளிலும் பார்க்க அதீத ஈடுபாட்டை, வணிக உரிமையாளர்கள் வழங்கவேண்டியது அவசியமாகும். இதன்மூலமாகவே, வணிகத்தின் நீட்சியையும் அதுசார் வெற்றியையும் உறுதி செய்துகொள்ள முடியும்.

நிதியியல், முயற்சியாண்மைக் குறைபாடு

இலங்கையின் பெரும்பாலான வணிகங்களின் தோல்விக்கு, மேற்கூறிய நிதியியல் திறன் தொடர்பான குறைபாடே மிக முக்கியமாகிறது. காரணம், இலங்கையில் மிக மோசமாகவுள்ள திறன்களில், இந்த நிதியியல் திறனும் ஒன்றாகும். என்னதான் வணிகத்தைத் திட்டமிடவும் அதனைக் கொண்டு நடத்தும் திறனை உரிமையாளர்கள் கொண்டிருந்தாலும், தமது முதலீடுகளை மிகத் திறமையாகக் கையாண்டு, அவற்றைச் சிறப்பாகக் கொண்டு நடத்துவதில் தடுமாற்றத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது, நிதியியல் திறன் குறைப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.

குறிப்பாக, வணிகத்தின் வெற்றிக்கு இந்த மூலதனம் மிக இன்றியமையாததாகும். இந்த மூலதனம்தான், வணிகத்தைக் கொண்டு நடத்தப் பெரிதும் உதவியாக அமையும். ஆனால், பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிகத்தின் செயற்பாடுகளுக்காக, தனியே இந்தத் தொழிற்பாட்டு மூலதனத்தைக் கொண்டிருப்பதில்லை. இதன்காரணமாக, வணிகங்கள் தொடர்ச்சியாகச் செயற்படுவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகின்றன. பெரும்பாலும், வணிக உரிமையாளர்கள் தமது இலாபத்தையே தொழிற்பாட்டு மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்.

ஆனால், இலாபம் எப்போதும் பண வடிவில் நம்மிடத்திலிருப்பதில்லை என்ற உண்மையை உணராதவராக இருக்கிறார்கள். இதன் காரணமாக, பெரும்பாலான வணிகங்களை தொடர்ச்சியாக நடத்திச்செல்லப் போதுமான நிதியின்மை காரணமாகத் தோல்வியைச் சந்திக்கின்றன.

முதலீட்டுப் பற்றாக்குறை

இலங்கையின் தொழில் முயற்சிகளுக்கு உள்ள மிகப்பெரும் தடைக்கல்லாக, முதலீடுகள் அமைந்துள்ளன. முயற்சியாளர்கள், மக்களுக்குத் தேவையான வணிகத்தை முன்னெடுக்கத் தயாராகவுள்ள நிலையிலும், பொருத்தமான முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இலங்கையில் காணப்படுகிறது.

பெரும்பாலான முயற்சியாளர்கள், நிதியியல் ரீதியான இயலுமையைக் கொண்டிராத நிலையில், முதலீடு செய்ய வருகின்ற முதலீட்டாளர்களும், தமது முதலீட்டுக்கு அதிகமான வணிகப் பங்கை (Business Share) எதிர்பார்க்கிறார்கள். இதனால், பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிக உரிமையை இழக்க விரும்பாது, கடன் முதலீடுகளை நோக்கி நகர்கின்றார்கள்.

இதன்போது, சில வணிகங்கள் தம்மை நிலைநிறுத்திக்கொண்டு, கடன் பொறுப்புகளை மீளச்செலுத்தி முன்னேறிக்கொண்டிருப்பதுடன், பல வணிகங்கள், தமது கடன் பொறுப்புகளை மீளச் செலுத்த முடியாமல், தமது வணிகங்களை மூடிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த முதலீட்டாளர்களுக்கும் வணிகங்களுக்கும் இடையில் உருவாகியுள்ள இடைவெளியைக் குறைத்து, இந்த முதலீட்டுக் குறைப்பாட்டை நிவர்த்திக்க வேண்டியது அவசியமாகிறது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்

Loading RSS Feed